ஒட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 டிசம்பர், 2014

தொல்காப்பியம் (தமிழ்) – பாலவியாகரண (தெலுங்கு) ஒட்டுக்களின் உறவு


                                                                                         - முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)
ட்டு என்பது ஓர் அடிச்சொல்லின் பின்னரோ அல்லது ஒரு முழுச் சொல்லின் பின்னரோ இணைந்து புதிய பொருளைத் தோற்றுவிப்பது அல்லது புதிய பொருள் ஏற்படுவதற்கு வித்திடுவது. காட்டாக, கவி+அர்=கவிஞர் என்பதைச் சுட்டலாம். இதனுள் கவி என்பது பாட்டு (Poem), பாவலன் (Poet), ஞானி (Sage), குரங்கு (Monkey) (2005:238) என்ற பொருண்மைகளுடைத்து. அச்சொல் ஓர் அடிச்சொல் வகைத்து. அச்சொல்லுடன் அர் எனும் பலர்பால் ஈறு ஒட்ட இடையில் ஞ் எனும் மெய் தோன்றி கவிஞர் எனும் புதியச் சொல்லையும் பொருளையும் தருகின்றது. அச்சொல் கவிதை எழுதும் ஆடவரையோ அல்லது பெண்டிரையோ குறிக்கும் பொதுச்சொல்லாயிற்று.
பொதுவாக, மொழியியலார் முன், பின், உள், மேல் ஆகிய ஒட்டுக்கள் இவ்வுலகில் வழங்கப்பெறும் மொழிகளில் காணப்படுகின்றன என்பர். இவற்றுள் முன்னொட்டு (Prefix) கொடைமொழிச் சொற்கள் கொள்மொழிக்குக் கடனாளப்படும் போது நிகழும் (காண்க: ராம: - இராமன்) தன்மையது. உள்ளொட்டு (Infix – அடிச்சொல்லின் உள்ளே நிகழும் மாற்றம். எ – டு. Kitāb) எகிப்து, அரபு மொழிகளிலும்; பின்னொட்டுத் (Suffix – வேர்ச்சொல்லுக்குப் பின்னர் வந்தமைவது. எ – டு. தந்த நிலம். இவற்றில் வரும் அம் பின்னொட்டு) தமிழிலும்; மேலொட்டு (Suprafix – முழுமையும் மேல்நிலை ஒலியன்களால் நிகழ்வது. எ – டு.  ma – tone) சீனமொழியிலும் காணப்படுகின்றன (2011: 265). இவ்வாறு பல்வகை ஒட்டுக்கள் உலகமொழிகளில் வழங்கினாலும், குறிப்பாகத் திராவிட மொழிகளில் பின்னொட்டே வழங்குகின்றன என்பது அறிஞர்களின் கருத்து. இதனை அவ்வம் மொழி இலக்கணங்கள் விளக்கியுள்ளமையிலிருந்து புரிந்து கொள்ளலாம். அதனைத் தமிழின் தொல்காப்பியத்திலும் தெலுங்கின் பாலவியாகரணத்திலும் காணலாம் என்பதை இக்கட்டுரை விளக்குகின்றது.