வெள்ளி, 21 அக்டோபர், 2016

செவ்வியல் உலாவி


பதிப்புரை
        இன்று தமிழ் இலக்கியங்கள் மீதான ஆய்வுப் பார்வை விரிந்துள்ளது. நூல் பதிப்புத் தொடங்கி இணையப்பதிப்பு என அதன் தளம் வளர்ந்துள்ளது. அவ்வளர்ச்சியில் இலக்கியப்படியின் (Literary Text) மீதான வாசிப்பும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற வாசிப்பிற்குத் தொடக்க காலத்தில்  (நூலகம் எனும் சிந்தனை உருவான பிறகு) அடிப்படையாக இருந்தது நூலகம் ஆகும். ஆகவே, முதற்கட்டப் பகுப்பு சிதம்பர அடிகள் நூலகத்தை அறிமுகப்படுத்தும் முகமாக இடம்பெறுகின்றது.

அதற்கடுத்த பகுப்பு பதிப்பும் பதிப்பு வேறுபாடும் என்பதாகும். இதில் இரண்டு கட்டுரைகள் இடம்பெறுகின்றன. ஒன்று, திருக்குறளின் முதற் பதிப்பாசிரியர் யார்? என்பதைப் பேசுகின்றது. இரண்டு, நற்றிணை பாடவேறுபாடுகளின் ஊடாக வரலாற்றை மீட்டெடுக்க அடிகோலுகின்றது.

இலக்கியப் பார்வைகள் எனும் பகுப்பில், ஆண்டலைப்புள் பறவை பற்றிய மீள்வாசிப்பும், மலையமான் திருமுடிக்காரியின் செயல்பாட்டு மீட்டெடுப்பும், கண்ணகி மரபுவழி தமிழின அடையாளப்படுத்தலும், ஏரெழுபதுவழிச் சமூக மீட்டெடுப்பும் முன்வைக்கப்பெற்றுள்ளன. இவை இலக்கியத்தை மீள்வாசிப்பு செய்யத் தூண்டுபவை. இவை போன்ற ஆய்வுகள் இனி, அடுத்துச் செய்ய வேண்டிய  ஆய்வுப் பார்வைகளை அடையாளம் காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, இணையமும் இலக்கியமும் எனும் பகுப்பில் இணையத்தில் கலித்தொகை இணைக்கப்பட்டுள்ளது. இதில் இணையத்தில் இலக்கியம் பதிவு செய்யப் பெற்றிருக்கும் முறைமை சுட்டிக்காட்டப் பெற்றுள்ளது. இப்பதிவு இலக்கியத்தை அடுத்தகட்ட நகர்விற்கு எடுத்துச் செல்லும் பாங்கை எடுத்தியம்பும்.

ஏனெனில், இன்று நூலகம் சென்று படிக்கும் ஆர்வம் மாணவர்களுக்கு\வாசகர்களுக்கு குறைந்து வருகின்றது. அதற்கு ஏற்ப நூலகமும் இணையத்தில் உலாவினால் மட்டுமே நூலக வாசகரைத் தன்வயப்படுத்த முடியும். இணையம் மூலமாக நூலகத்திற்கு இழுத்து வரும் பணியையும் மேற்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருந்து வருகின்றோம் என்பதை மறந்து விட முடியாது.

அந்த வகையில் இங்குப் பதிப்பிக்கப்பெற்றிருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பன்முகத்தன்மை கொண்டவை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். கட்டுரை ஆசிரியர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். செல்பேசியின்வழித் தொடர்பு கொண்டபோது வெளியிட உடனே அனுமதி நல்கிய என் இணையாசிரியர் முனைவர் மு.முனீஸ்மூர்த்தி (இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் ISSN:2455-0531) அவர்களுக்கும் நன்றி. இதில் இடம்பெற்ற கட்டுரைகள் இனம் இதழிலிருந்து பகுப்பு நோக்கில் எடுக்கப்பெற்றவை. இந்நூல் உருவாக்கத்திற்கு உதவிய என் துணைவி நித்யாசத்தி்யராஜ் (தட்டச்சிடல்) அவர்களுக்கும், முனைவர் ந.இராஜேந்திரன் (அட்டை வடிவமைப்பு, பகுப்புத் தொடர்பான கருத்துரைத்தல்), முனைவர் ம.தமிழரசன் (கருத்துரைத்தல், மெய்ப்புத் திருத்தம்) ஆகியோர்க்கும் என் நன்றி. இதனை இணைய நூலாக வெளியிடுவதற்கு வாய்ப்புத் தந்த www.lulu.com நிறுவனத்தாருக்கும் நன்றி.


*********************

பதிப்பிக்கப்பெற்றிருக்கும் கட்டுரைகள் உள்ளே…

நூலகம்

  1. சிதம்பர அடிகள் நூலகம் - முனைவர் அருவி.தேன்மொழி 5
பதிப்பம் பதிப்பு வேறுபாடும்
  1. திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்? - முனைவர் ஆ.மணி 14
  2. நற்றிணை பாடவேறுபாடுகளினூடாக வரலாற்று மீட்டெடுப்பும் வரலாற்றெழுதுதலும் - முனைவர் க.பாலாஜி 20

இலக்கியப் பார்வைகள்

  1. ஆண்டலைப்புள் : ஆந்தையா? கோழியா? - முனைவர் மு.முனீஸ் மூர்த்தி 26
  2. வேந்தர்களின் தலைவிதியை வரையறுத்தவன் மலையமான் திருமுடிக்காரி - முனைவர் ந.இராஜேந்திரன் 29
  3. கண்ணகி மரபு: தமிழ் இன அடையாள உருவாக்கமும் அடையாள அழிப்பின் அரசியலும் - முனைவர் சிலம்பு நா.செல்வராசு 35
  4. ஏரெழுபது : உள்ளும் புறமும் - முனைவர் இரா.இராஜா 57

இணையமும் இலக்கியமும்

  1. இணையத்தில் கலித்தொகை - முனைவர் இரா.குணசீலன் 71


*********************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன