ஞாயிறு, 22 நவம்பர், 2015

கணினித்தமிழ் ஆய்வாளர்

திருமதி ம. பார்கவி (1984) ... போடிநாயக்கனூரில் பிறந்து வளர்ந்த இவர், பள்ளிப்படிப்பிற்குப் பின்னர், திண்டுக்கல் ஆர். வி. எஸ். பொறியியல் கல்லூரியில் பி.இ. (மின்னணுவியல் , தகவல்தொழில்நுட்பம்) படிப்பில் இணைந்து 2006-இல் பட்டம் பெற்றார். அதன்பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் (தமிழ்மொழித்துறையின்) மொழியியல் ஆய்வுப்பிரிவில் நிறுவப்பட்டிருந்த கணினிமொழியியல் ஆய்வுக்கூடத்தில் (Computer assisted Language Technology Lab - CALT) 2007-08 ஆண்டுகளில் கணினிநிரலாக்கராகப் பணிபுரிந்தார். அங்கே முதுகலை, எம்ஃபில் கணினிமொழியியல் படித்த மாணவர்களுக்குக் கணினியின் அடிப்படைகள், நிரலாக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு உதவினார். மொழியியல் துறையோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட இவர், பின்னர் அத்துறையில் செயற்பாட்டுமொழியியல் மாணவராகவே இணைந்து (2008-10) , அதில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இதன் பயனாக இவர் கணினிமொழியியல் துறையில் முழுமையாக ஈடுபடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்காக அதனுடைய விஷுவல் ஸ்டுடியோ 10-க்கான (Visual Studio 2010) தமிழாக்கம் (Localization) செய்யும் பணிக்குழுவிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 2010 ஜூலைமுதல் நான் நிறுவியுள்ள என் டி எஸ் லிங்கசாஃப்ட் சொலூஷன்ஸ் நிறுவனத்தில் கணினிமொழியியல் நிரலாக்கராகப் பணியில் இணைந்தார். மென்தமிழ் - தமிழ்ச்சொல்லாளர் மென்பொருளுக்கான உருவாக்கத்தில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அந்த மென்பொருளின் சிறப்பான பகுதிகளான சொற்பிழைதிருத்தி, சந்திப்பிழைதிருத்தி ஆகியவற்றை உருவாக்குவதிலும் அதற்கு அடிப்படையான தமிழ் உருபன்பகுப்பாய்வியை (Morphological Parser) உருவாக்குவதிலும் அதற்கான தரவை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். தொடர்ந்து அந்த மென்தமிழ் மென்பொருளை வளர்த்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். குறிப்பாக, தமிழுக்கான விசைப்பலகைகள், ஒருங்குறி அல்லாத தமிழ்ப் பனுவல்களை ஒருங்குறியில் மாற்றித் தரும் மொழிக்கருவி (Encoding Converter), சொல்லடைவு (Indexing), ஆய்வாளர்களுக்கு உதவும் துணைநூல்பட்டியல் தயாரிப்பு (Bibliography) போன்ற மொழிக்கருவிகளை உருவாக்குவதில் பெரும்பங்காற்றிவருகிறார். பொறியியலில் பட்டம் பெற்று, பின்னர் செயற்பாட்டுமொழியியலிலும் பட்டம் பெற்ற இவர், ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாகத் தமிழ்க்கணினிமொழியியல் துறையில் தன்னை ஈடுபடுத்திவருகிறார். இவருடைய கணவரும் (திரு. அருண்குமார்) ஒரு மென்பொருள் பொறியாளரே.

நன்றி - முனைவர் ந.தெய்வசுந்தரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன