திங்கள், 16 ஜூன், 2014

அருகிவரும் குதிர்ப் பயன்பாடு


இன்று அறிவியல் எனும் விந்தையால் புதிது புதிதாக ஆயிரமாயிரம் கருவிகளையும் புழங்குப் பொருட்களையும் கண்டுபிடித்து வருகின்றோம். அவற்றிற்கிடையே பழஞ்சொத்துக்களையும் இழந்து வருகின்றோம் என்பதையும் மறந்துவிடலாகாது. ஊர்ப்புறம் (கிராமம்) என்றாலே அது நெல் விளைச்சலின் சொத்து. எனவே அது நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது எனும் கருத்து வலுப்பெற்றது. அது இன்று விலை நிலங்களின் இருப்பிடமாக மாறி வருகின்றது. அதனைப் போன்றே அவ்வுழவர்கள் பயன்படுத்திய குதிரின் பயன்பாடும் மறைந்து வருகின்றது. இத்தன்மை அப்பயன்பாட்டின் மீதான அக்கறை இல்லை என்பதைக் காட்டுகின்றது.

குதிர் எனும் சொல் நெல் போன்ற தானிய வகைகளைச் சேகரிக்கப் பயன்படும் ஒருவகை கலம் என அகராதிகள் பொருள் கொள்கின்றன. இதன் பயன்பாடு பயிர்த்தொழில் கண்டுபிடிக்கப்பட்ட காலம் தொட்டே தோன்றிற்று எனலாம். அத்தொழில் புரிந்து வந்த மாந்தன் தேவைக்குப் போக மீதமிருந்தவற்றை எதிர்கலத் தேவைக்காக சேமிக்க குதிரைக் கண்டறிந்தான். அதற்கு நெற்குதிர் எனப் பெயரிட்டான். பின்பு பல தானிய வகைகளையும் சேமித்து வைக்கவும் கற்றுக் கொண்டான்.
இக்குதிர்ப் பயன்பாடு குறித்துச் சங்கப் பாக்களும் சுட்டுகின்றன. அப்பாக்களுள் அகநானூற்றிலும் (எட்டுத்தொகை), பெரும்பாணாற்றுப்படை மதுரைக்காஞ்சி (பத்துப்பாட்டு) முதலியனவற்றிலும் காணப்படுகின்றன. அக்குறிப்புகள் வருமாறு:
1.   கரிகுதிர் மரத்த கான வாழ்க்கை                         அகம். 75:5
2.   குதிர்க்கால் இருப்பை வெண்பூ உண்ணாது      அகம். 321:5
3.   பிடிக்கணத் தன்ன குதிருடை முன்றிற்               பெரும். 186
4.   நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளி                     மதுரை. 169
இப்பாவடிகளுள் முதலாவது தீயால் எரிந்து நின்ற மரம் குதிர்போல் காட்சித் தருகின்றது என்பதாகவும், இரண்டாவது இருப்பையின் வெள்ளிய பூ குதிர்போல் தோன்றுகின்றது என்பதாகவும், மூன்றாவது யானைக் கூட்டம் நின்றாற் போல் குதிர்கள் வீட்டின்முன் தோன்றுகின்றன என்பதாகவும், நான்காவது பெரிய இல்லங்களிலும் குதிர் இருந்த்து என்பதாகவும் குறித்து நிற்கின்றன். இவை சங்க காலத்தில் அடித்தட்டு முதல் மேல்தட்டு வரையிலான மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளமையைக் காட்டுகின்றன.
தற்காலத்தில் ஊற்புறங்களில் கூட குதிரைக் காண்பது அரிதாகிவிட்டது. இருப்பினும் ஒருசில அடித்தட்டு மற்றும் நடுநிலை மக்கள் வாழும் இல்லங்களில் மட்டும் காணப்படுகின்றன. அதனைப் பதிவு செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.
 முழுவதும் வாசிக்க http://www.geotamil.com/pathivukalnew/1_kuthir.pdf,
 http://www.geotamil.com/pathivukalnew/index.php?view=article&catid=2:2011-02-25-12-52-49&id=2157:2014-06-15-04-21-51&tmpl=component&print=1&layout=default&page=

                   - த. சத்தியராஜ் (நேயக்கோ), கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன